Tuesday, 12 November 2013

தங்க நாற்கர சாலையும் ராமாஸ் கபேயும்


தங்க நாற்கர சாலையும் ராமாஸ் கபேயும்



நவம்பர் 1, 2013, வெள்ளிகிழமை, கர்நாடகத்தில் கட்டாய விடுமுறை. திங்கள் 4 ம் தேதி பலி பாதமி, மீண்டும் விடுமுறை. மகளுக்கும் கல்லூரி விடுமுறை. மனைவிக்கு ஜேர்மன் வகுப்புக்கள் எடுக்க விருப்பம்தான் , ஆனால், மாணவர்கள்  வர மறுத்துவிட்டார்கள். இந்த 4 நாட்களை "நல்ல " முறையில் பயன்படுத்த வேண்டும் என்ற உந்தலினால் ஏற்காடு செல்ல வேண்டும் என்று முடிவு செய்தோம்.

ஏற்காடு செல்லுவது என்பது இனிமையான அனுபவம். இரண்டு காரணங்கள் . ஒன்று- வேகமான பயணத்துக்கு ஏற்ற  தங்க நாற்கர சாலை மற்றும் தர்மபுரியில் உள்ள  அறுசுவை உணவுக்கு பேர் போன ராமாஸ் கபே!!!

கடந்த 15 வருடங்களில் நாம் இந்தியாவில் பெருமை கொள்ளகூடிய விஷயங்கள் பல. கைபேசி, தொலைக்காட்சி ( ஒரே அலைவரிசையில் மாலை 7 மணிக்கு வயலும் வாழ்வும் பார்த்த ஞாபகம் இருக்கிறதா ? :) ) மற்றும் தங்க நாற்கர சாலை( Golden Quadrilateral)  . முந்தைய பிரதமர் திரு வாஜ்பாய் அவர்கள் கொண்டு வந்த இந்த திட்டத்தினால் நமது வாழ்க்கையில் ஒரு புதிய அத்யாயம் ஏற்பட்டுள்ளது. அதி வேகமாக செல்ல கூடிய நவீன உந்து வண்டிகள் நம்மூரிலே இப்பொழுது உற்பத்தி செய்ய படுகின்றன. விடுமுறை என்றால் பேருந்து அல்லது ரயில் போன்ற்வைகளைதான் நம்பியிருக்க வேண்டும் என்ற கட்டாயமும் இல்லை.

இப்பொழுது நாம் ராமாஸ் கபே பற்றி பேசுவோம். தர்மபுரியில் ஊருக்கு நடுநாயகமாக மெயின் சாலையில் இது அமைந்துள்ளது. தங்க நாற்கர சாலை வந்த பிறகு இங்கு பலரும் வருவதில்லை. அந்த சாலையில் அமைந்துள்ள பல புதிய உணவகங்களுக்கு சென்று விடுகின்றனர். சில ஆண்டுகளுக்கு முன்புநான் என் நண்பர் விசயரதினத்தை அங்கு அழைத்து சென்றிருந்தேன் . முதலில் ஒரு வித தயக்கத்துடன் நுழைந்த அவர், ஒரு இட்லிக்கு பிறகு , கை சட்டையை மடித்து விட்டுக்கொண்டு அங்கு உள்ள பல பதார்த்தங்களை  ஒரு  "கை " பார்த்தார். இவரை போன்று பலருக்கு இந்த விடுதியயை அறிமுகம் செய்திருக்கிறேன். என் மகளும் , மனைவியும் பட்டினி கிடந்தால் கிடப்பார்களே ஒழிய , தர்மபுரியை தாண்டும் பொழுது இங்கு உணவு அருந்தாமல் செல்ல ஒப்பு கொள்ள மாட்டார்கள். அந்த உணவின் மகிமை அப்படி.

உங்களின் கேட்காத கேள்வி எனக்கு புரிகின்றது. முட்டுக்கும் முழங்காலுக்கும் முடிச்சு என்பதிர்கேற்ப தங்க நாற்கர சாலைக்கும் ராமாஸ் café க்கும் என்ன சம்பந்தம் என்று நீங்கள் வினவலாம்.

இந்தியாவில் இரண்டு ஊர்கள் ஒரே மாதிரி இருப்பதில்லை. பக்கத்து ஊர்களாக இருந்தாலும் சில பல வித்தியாசங்களை காணலாம். பழக்க வழக்கங்கிளில் மாறு படலாம். முக்கியமாக உணவு..... அமெரிக்காவில் எங்கு சென்றாலும் பர்கர் ஒரே மாதிரி சுவைக்கும் (பர்கருக்கு எப்படி சுவை இருக்கு முடியும் என்று கேட்காதீர்கள்) என்று அவர்கள் பெருமை பட்டு கொள்வார்கள். இங்கு அவ்வாறு உள்ள அவலம் இல்லை. திருநெல்வேலி இருட்டு கடை அல்வா , கோயில்பட்டியில் கிடைக்காது. தார்வாடில் கிடைக்கும் பேடா, பெல்காமில் கிடைக்காது- அங்கு குந்தா தான் கிடைக்கும். இவ்வாறு பல பல உதாரணங்கள்.

தங்க.... சாலை வருவதிற்கு முன்பு நாம் ஒவ்வொரு ஊரிலும் அந்தந்த ஊருக்கு விசேஷமான பொருட்களை வாங்குவதை வழக்கமாக கொண்டிருந்தோம். கேரளா என்றால்  பனானா சிப்ஸ். அதுவும் சில குறிப்பிட்ட கடைகளுக்கு தேடி கண்டுபிடித்து சென்று வாங்கியிருக்கிறோம். கொச்சி மலபார் சிப்ஸில் கிடைப்பது போன்று வேறு எங்கும் கிடைக்காது.

  இன்று நிலைமை மாறி விட்டது. தங்க...... சாலை ஊருக்குள் செல்வது இல்லை. வேகமாக செல்லும் நமக்கு ஊர் என்பது ஒரு மைல்கல்தான். நாம் அதை எட்டிப்பார்ப்பது கூட இல்லை. இந்தியாவை போன்ற கலாசார மாறுபாடுகள் கொண்ட நம் நாட்டில் நாம் எதையோ இழக்கின்றோமோ என்ற ஆதங்கம்தான் கண் முன்னே நிழலாடுகின்றது. சரவணா பவன் போன்று " பாஸ்ட் பூட்" பெருகி விட்ட இக்காலம்களில் , 50 வருடமாக உணவை தனித்தன்மையுடன் வழங்கி வரும் ராமாஸ் கபேக்கு ஏது வாய்ப்பு ? கம்பியில்லா தந்தியை போல, வீட்டில் அமைந்துள்ள தொலை பேசியை போல ராமாஸ் கபேயும் கால சுவட்டிலிருந்து மறைய வேண்டியதுதானா ? இருட்டு கடை அல்வா மறைந்து எங்கும் ஒரே போல உள்ள "cடொனல்ட்' அகர்வால் அல்வா மட்டும்தான் நம் குழந்தைகளுக்கு இனி கிட்டுமா ?

இதை போன்று ஒவ்வொரு ஊரிலும் சிறப்பு கடை தெருக்கள் உண்டு. கோவையில் ஒப்பணகார வீதி, திருவனந்தபுரத்தில் சாலை பஜார், நம் பெங்களூரில் கம்மேர்சியல் தெரு போன்றவை. ஒவ்வொரு கடை தெருவிற்கும் ஒரு தனி தன்மை உண்டு இன்று நம் குழந்தைகள் "பல அங்காடி கட்டிடத்தை ( MALL ) விரும்புகிறார்கள். சென்னையில் உள்ள FORUM Mallkkum பெங்களூருவில் உள்ள ஒன்றுக்கும் ஏதாவது  வித்யாசம் இருக்கிறதா  , கூறுங்கள் பார்ப்போம் ? மயிலை கற்பகாம்பாள் மெஸ் பெங்களூரில் இல்லை, பகத்ராம் ஸ்வீட்ஸ் சென்னையில் இல்லை. ஆனால் SUBWAY , KFC ஆகியவை இரண்டு FORUM  MALL களிலும் உள்ளன. ஒரே போன்று.

சில மாதங்களுக்கு முன்பு ஒரு கட்டுரை படித்ததாக ஞாபகம். இந்த புதிய சாலைகள் பல கிராமங்களை இரண்டாக பிரித்து குறுக்கே செல்லுகின்றன. சாலையை கடக்க முடியாத காரணங்களினால் ஒரு குடும்பமாக இருந்த கிராமம் இரண்டாக பிரிந்துள்ளது. " ரோட்டிற்கு  இந்த பக்கம் , அந்த பக்கம்  என்று ஊர் சனங்கள் பேசி கொள்வது, வேறுபாடு கொள்வது வேதனை அளிப்பதாக இருக்கிறது

இந்த மாறுதல்களை காலத்தின் கட்டாயம் என்று பொருள்கொண்டு மென்மேலும் செல்வதா அல்லது தலைமுறை இடைவெளியால் ஏற்படுகின்ற ஒரு பிரிவினையின் தாக்கமா? மாறுதல்களை ஏற்று கொண்டு ஆகத்தான் வேண்டுமா ?

எனக்கு  தெரியவில்லை! உங்களுக்கு ?