கடல்
நான்
சில நாட்களுக்கு முன்புதான் BLOG எழுத ஆரம்பித்தேன். அப்பொழுது
என் மனதில் , என்னையும் அறியாமல் குடி கொண்டிருக்கும் ஒரு
அவா என் கண் முன்
வந்தது. அதுதான் கடலின் மீது
நான் கொண்டுள்ள ஒரு ஈர்ப்பு. நான்
பிறந்தது ஒரு கடற்கரை பட்டினத்தில்தான்,
பள்ளியில் படித்த 4 இறுதியாண்டுகள் எங்கள் வீடு தூத்துக்குடி
கடற்கரையை நோக்கிதான் அமைந்து இருந்தது.
ஏனோ
தெரியவில்லை, கடலின் மீது ஒரு
பாசப்பினைப்பு உருவாகி விட்டது. பாசமென்றால்
கடலில் இறங்கி நீந்துவது அல்லது
கடற்பயணம் செய்வது அல்லது கடல்
உயிரனங்களை உண்பது என்பதை போன்ற
செயல்கள் அல்ல. சரியாக சொல்லபோனால்
இவை போன்ற நடவடிக்கைகளில் எனக்கு
அறவே விருப்பம் இல்லை. வருடந்தோறும் குடும்ப
பயணம் மேற்கொண்டு கடலை பார்க்கும் பொழுது
ஒரு இனம் தெரியாத பயம்.
என் அன்பு மகளுக்கு எப்பொழுதும்
ஒரு நிராசை உண்டு. மற்றவர்களை
போல ஆர்ப்பரிக்கும் அலைகளில் நனைவது என்பது அவளுக்கு
பிடித்த ஒன்று. தனியாக கடலில்
நிற்க அவளுக்கு தைரியம் கிடையாது. என்
மனைவிக்கோ அது அவளுடைய 'மூட்
" ஐ பொருத்தது.
எனக்கு அலைகளில் நிற்பது அவ்வளவாக
பிடிக்காது. மகள் என்னை மீண்டும் மீண்டும் அழைத்தாலும் நான் செல்ல மாட்டேன். ஒரு தொலைவில்
மணலில் அமர்ந்து அலைகளை கண்டு அதியசித்து மகிழ்வதுதான் எனக்கு பிடிக்கும்.
கடலில் அப்படி
என்ன மோகம் ? கடலை கண்டால் அப்படி என்ன பயம்?
கடல்
தாய் அழகானவள். தாயின் பரந்த மனப்பான்மை கொண்டவள். பெண்ணுக்குரிய நளினத்துடன் நாள்தோறும் மணிக்கு ஒன்று
என்று என்று வண்ண வண்ண ஆடைகள் மாற்றி மகிழ்பவள்.
நாணத்துடன் அவள் சந்திரனையும் சூரியனையும் எதிர்கொள்வது தான் எத்தனை கொள்ளை அழகு? மாதம்
ஒரு நாள் சந்திரன் வரவில்லை என்றால் அவள் கொள்ளும் கோபம் தான் என்ன? அதனால் அவளின்
ஆர்ப்பரிக்கும் தாண்டவம் கண் கொள்ளா காட்சி !பகலவன் உதிக்கும் பொழுது அவள்
அணியும் தங்க நிற ஆடையின் அழகுதான் என்ன , அவன் விடை பெற்று சந்திரனை வரவேற்கும் அவளின்
மேல் படர்ந்திருக்கும் அந்த மாலை ரேகைகளுக்குதான் என்ன ஒரு மாறுபாடு ? புயலேன்றால்
தானும் வெறியாட்டம் ஆடி மகிழ்வாள் அதன் பின்பு இவல்லஅல்லவோ பச்சை குழந்தை என்று அமைதி
காப்பாள்.
என்னுடைய
நோக்கில் நான் கடல் தாயை
ஒரு வித்தியாச கோணத்தில் காண்கின்றேன். ஆறுகள் ஓடி விடுகின்றன.
ஓடிய வெள்ளத்தை நாம் திரும்பவும் காணபோவதில்லை.
காலத்தை போன்றது . ஆறுகள் நமக்கு கூறும்
செய்தி 'யாக்கையின் நிலையாமை".மலைகள் பேசுவது இல்லை,
ஓடி போவதும் இல்லை. அவை
நமக்கு உணர்த்தும்
செய்தி " இயற்கையின் நித்யதன்மை ". கடல் முக்காலத்திற்கும் பொது.
நான் படித்த கால்டுவெல் பள்ளியின்
சரித்திர மற்றும் பூகோள ஆசிரியர்
ஆசான் மார்டின் அவர்கள்
சொன்ன வார்த்தைகள் என்காதுகளில் ரீங்காரமிடுகின்றன. “இன்று நாம் காணும்
இந்த கடல் அலைகள் உங்கள்
முப்பாட்டன் கால்களை, உங்கள் தாய் தந்தையாரின்
கால்களை தழுவியிருக்கிறது . இன்று
நீங்கள் அந்த அலைகளை கண்டு
மகிழ்கிறீர்கள். நீங்கள் காணும் இதே
அலைகள் உங்கள் வருங்கால சந்ததியிரின்
கால்களை பரவும்”
வாழையடி
வாழையாக வளரும் மாந்தர்களுக்கு
கடல் என்பது ஒரு தொடர்கதை.
ஆற்றை போல்
அவள் மறைந்து விடுபவள் அல்ல.
மலையை போன்று அவள் பெசாமடந்தயையும்
அல்ல. எனக்கு கண் விருந்து
அளித்தவள், என் மகளின் அன்புக்கு பாத்திரமானவள், என் தாயை ஈர்த்தவள் என்று சொல்லிக்கொண்டே
போகலாம் . பல ஆண்டுகளுக்கு பிறகு என் தலைமுறையில் வந்தவர்களும் அவ்வாறு கூறி கொள்வார்கள். என்னே அவளது என்றும்
மாறா இளமை ! அன்பின் துடிப்பு, அதை வெளிக்கொணரும் மீண்டும் மீண்டும் பொங்குகின்ற அவ்வலைகள்
?
தொடர்ந்து
ஆர்ப்பரிக்கும் காலத்தால் அழியாத அலைகளுக்கு முன்பு நான் ஒரு சிறு துகள். அலைகளை சிறு
வயதில் இன்பத்துடன் பார்த்த கண்கள் , கால சக்ரத்தின்
சுழலில் இந்த உடம்பின் நிலயற்ற தன்மையை நினைத்து இன்று ஒரு இனம் தெரியாத பயத்துடன்
நோக்குகிறது. அடுத்த தலைமுறைக்கு நாம் தயாராக வேண்டும் என்ற எண்ணம் மேலோங்குகிறது.
ஆனால்
, கடல் தாய் என்றும் இளமையானவள் . என் தாயை ஆட்கொண்டவள் , என் மகளை சுண்டி இழுப்பவள்.
இதுவே என்னை அவளை நோக்கி என்றும் இழுக்கின்றது. அதுவே என் மோகம். என் வாழ்க்கையின் கடந்த சுவடுகளை நினைவூட்டுகின்றது.
எதிர் காலத்தின் கேள்விகளை எழுப்புகின்றது,
அதுவே என் இனம் தெரியாத பயம்.
தாயே,
காலம் முடியுமட்டும் நான் மீண்டும் மீண்டும் உன்னை காண வருவேன். உன்னை அரவணைக்க, கட்டி
அணைத்து அன்பு முத்தமிட , என் எண்ணங்களை எங்கெங்கோ எடுத்து செல்ல !
தாயே,
இளமையானவள் நீ, அழகானவள் நீ , அன்பு காட்டுபவள் நீ, ஆக்ரோஷமும் நீயே.
வணங்குகிறேன்.


